புதன், 28 டிசம்பர், 2016

காவலர் பனியிடங்களை நிரப்புக.! --மருத்துவர் அன்புமணி இராமதாசு.!

இனிய இரவு வணக்கம்...சொந்தமே
காவலர்கள் பணி நேரத்தை வரையறுக்க
வேண்டும் : காலியிடங்களை நிரப்புக!
சென்னை பரங்கிமலை ஆயுதப்படை முகாமில் காவலராக பணியாற்றி வந்த கோபிநாத் என்ற இளைஞர் ஞாயிற்றுக் கிழமை காலை பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவலர் கோபிநாத்தின் தற்கொலை மிகவும் கொடுமையானது. மதுரையைச் சேர்ந்த 24 வயதாகும் கோபிநாத் கடந்த 2013 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தொடக்கத்தில் தூத்துக்குடியில் பயிற்சி மேற்கொண்ட அவர், பின்னர் பழனியில் உள்ள சிறப்புக் காவல்படை முகாமில் பணியமர்த்தப்பட்டார். சொந்த ஊருக்கு அருகில் பணியாற்றி வந்த கோபிநாத் கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்னை பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை பட்டாலியனுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், 3 மாதங்களாக அவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் நண்பர்களின் அறையில் தங்கி அவர்கள் உதவியுடன் உணவுத் தேவைகளை சமாளித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களில் பலமுறை உயரதிகாரிகளை சந்தித்து தமக்கு ஊதியம் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அவர்களோ பல்வேறு காரணங்களைக் கூறி கோபிநாத்துக்கு ஊதியம் தராமல் தட்டிக் கழித்துள்ளனர். இதனால் கோபிநாத் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக அவருடன் பணியாற்றிய பிற காவலர்கள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி நான்கு நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று விட்டு கடந்த 19&ஆம் தேதி ஆயுதப்படை முகாமுக்குத் திரும்பிய கோபிநாத் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டுள்ளார். ஆனால், அதைப்பொருட்படுத்தாமல் அவரை காவல் பணியில் ஈடுபடுத்தியதால் மன உளைச்சலின் உச்சத்திற்கு சென்று அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதை கோபிநாத் எழுதி வைத்துள்ள தற்கொலைக் கடிதத்திலும் உறுதி செய்திருக்கிறார். கோபிநாத்தின் தற்கொலையை தனித்த நிகழ்வாக பார்க்கக் கூடாது. காவல்துறையில், அதிலும் குறிப்பாக சிறப்புக் காவல் படை மற்றும் ஆயுதக் காவல் படை பிரிவில் பணியாற்றும் காவலர்களில் பெரும்பான்மையினரின் நிலை இது தான். அவர்கள் அரசாலும், காவல்துறையாலும் எந்திரங்களாகத் தான் பார்க்கப்படுகிறார்களே தவிர மனிதர்களாக பார்க்கப்படுவது இல்லை என்பது தான் பெரும் கொடுமை.
கடந்த நவம்பர் மற்றும் திசம்பர் மாதத்தை எடுத்துக் கொண்டால், நவம்பர் 10 ஆம் தேதி முதல் வங்கிகளிலும், தானியங்கி பணம் வழங்கும் மையங்களிலும் (ஏ.டி.எம்) காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நாளில் இருந்து நான்கு நாட்களுக்கு ஓய்வில்லாமல் காவல் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து வர்தா புயல் மீட்புப் பணி, கிறித்துமஸ் என காவலர்களின் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்து புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பொங்கல் திருநாள், குடியரசு நாள் என இன்னும் ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு ஓய்வு கிடைக்கப் போவதில்லை. இயந்திரத்திற்கு கூட ஓய்வு தேவைப்படும் நிலையில், காவலர்கள் ஓய்வில்லாமல் உழைப்பதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மன உளைச்சலில் இருந்து விடுபடுவதற்காக அவர்களுக்கு உளவியல் கலந்தாய்வோ, பொழுதுபோக்கு ஏற்பாடுகளோ தமிழக அரசாலும், காவல்துறையாலும் செய்யப்படாதது நல்வாய்ப்புக் கேடானது ஆகும்.
காவலர்களுக்கு பணி நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப் பட்டு வரும் நிலையில் அதை ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை. அனைவருக்கும் 8 மணி நேர பணி மட்டுமே வழங்கப்படும் நிலையில் காவலர்கள் மட்டும் சில நேரங்களில் 24 மணி நேரமும் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகின்றனர். தமிழக காவல்துறையில் மொத்தமுள்ள 1,21,168 பணியிடங்களில், 97,512 பேர் மட்டுமே இந்த ஆண்டு தொடக்கத்தில் பணியில் இருந்தனர். 23,656 பணியிடங்கள் காலியாக இருந்தன. அதன்பின் கடந்த ஓராண்டில் ஏற்பட்ட காலியிடங்களையும் கணக்கில் கொண்டால், காலியிடங்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியிருக்கும். மொத்தப் பணியிடங்களில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமான இடங்களை காலியாக வைத்திருந்தால்,காவலர்களின் பணிச்சுமையும், அதனால் மன உளைச்சலும் ஏற்படுவதை எவரும் தடுக்க முடியாது. இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை அடுத்த சில மாதங்களில் முழுமையாக நிரப்ப வேண்டும்.
அதுமட்டுமின்றி காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை, அரசு ஊழியர்கள் & காவலர்கள் இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைதல், ஏழு ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு, காவலராக பணியில் சேருபவர்கள் ஓய்வுபெறும் போது ஆய்வாளராக பதவி உயர்வு பெறுவதை உறுதி செய்தல், அனைத்து மாவட்டங்களிலும் காவலர் நல அமைப்புகளை ஏற்படுத்துதல், படி உயர்வு, சலுகை விலையில் பொருட்களை வழங்கும் கேண்டீன்களை அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் விரிவு படுத்துதல் உள்ளிட்ட காவலர் நலத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மருத்துவர். அன்புமணி இராமதாஸ்
#DrAnbumani #Anbumani #AnbumaniRamadoss #Ramadoss #Leadthechange #Changeandprogress #PMK #AnbumaniStatement #TNPolice

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...