ஞாயிறு, 8 ஜனவரி, 2017

மின்னனு பரிமாற்றத்திற்கான கட்டனத்தை நீக்க வேண்டும்.!! மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை.

டெபிட் கார்டு உள்ளிட்ட மின்னணு பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: முரண்பாடுகளின் மொத்த உருவத்திற்கு உதாரணம் கூற வேண்டுமென்றால் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசின் அறிவிப்புகளையும், செயல்பாடுகளையும் தான் கூற வேண்டும். ஒருபுறம் மக்கள் பணப் பரிமாற்றத்திலிருந்து மின்னணு பரிமாற்றத்திற்கு மாற வேண்டும் என்று கூறி வரும் மத்திய அரசு, மற்றொரு புறம் அதை வெறுக்கும் வகையிலான செயல்களை செய்து வருகிறது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்குடன் ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என கடந்த நவம்பர் 8&ஆம் தேதி அறிவித்த பிரதமர் நரேந்திரமோடி, அவற்றுக்குப் பதிலாக ரூ.2000, ரூ.500 புதிய தாள்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாக அறிவித்தார். புதிய ரூபாய் தாள்கள் குறைந்த எண்ணிக்கையில் வெளியிடப்பட்டதால், வங்கிகளில் இருந்தும், தானியங்கி பணம் வழங்கும் நடுவங்களில் இருந்தும் பணம் எடுக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வங்கிகளில் வாரத்திற்கு ரூ.24 ஆயிரமும், தானியங்கி பணம் வழங்கும் நடுவங்களில் (ஏ.டி.எம்) ஒரு நாளைக்கு 2500 ரூபாயும் மட்டுமே எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும், பெரும்பாலான வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் நடுவங்கள் பணம் இல்லாததால் செயல்படவில்லை. இதனால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், எந்த வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் நடுவத்தில் வேண்டுமானாலும் பணம் எடுக்க வசதியாக, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுப்பதற்காக வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. திசம்பர் 31 &ஆம் தேதிக்குள் பணத் தட்டுப்பாடு தீர்ந்து விடும் என்பதால், அன்று வரை இந்த சலுகை நீடிக்கும் என்றும் மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அறிவித்தன.

திசம்பர் மாதம் முடிவடைந்து ஜனவரி 8&ஆம் தேதியும் பிறந்து விட்டது. ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என அறிவித்து 2 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால், பணத் தட்டுப்பாடு இன்னும் தீரவில்லை. வங்கிகளில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு இன்னும் உயர்த்தப்படவில்லை. தானியங்கி பணம் வழங்கும் நடுவங்களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 2500 ரூபாயிலிருந்து ரூ.4500 ஆக உயர்த்தப்பட்டாலும் ரூ.500 தாள் தட்டுப்பாடு காரணமாக ரூ.4000, அதுவும் திறந்திருக்கும் குறிப்பிட்ட சில நடுவங்களில் மட்டுமே எடுக்க முடிகிறது. மற்ற தானியங்கி பணம் வழங்கும் நடுவங்கள் 61 நாட்களாக பூட்டியே கிடக்கின்றன. இந்த உண்மைகள் அனைத்தும் அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நன்றாக தெரியும்.

ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தானியங்கி பணம் வழங்கும் நடுவங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுக்க வழங்கப்பட்டிருந்த கட்டண சலுகையை ரிசர்வ் வங்கி இரத்து செய்து விட்டது. அதனால், கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் தானியங்கி மையங்களில் மாதத்திற்கு 5 முறைக்கு கூடுதலாகவும், மற்ற வங்கிகளில் 3 முறைக்கு அதிகமாகவும் பணம் எடுத்தால், அவ்வாறு பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.15 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புத்தாண்டு முதல் இக்கூடுதல் கட்டண முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக பற்று அட்டைகளின்(Debit Card) தன்மையைப் பொறுத்து ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை ஒரே தடவையில் எடுக்க முடியும். மற்ற வங்கிகளின் தானியங்கி நடுவங்களில் ஒரு முறைக்கு ரூ.10,000 வீதம் 3 முறை பணம் எடுக்க முடியும். அதாவது, ஒரு பற்று அட்டை மூலம் மாதத்திற்கு ரூ.1.55 லட்சம் முதல் ரூ.2.80 லட்சம் வரை கூடுதல் கட்டணம் செலுத்தாமல் தானியங்கி பணம் வழங்கும் நடுவங்களில் இருந்து பணம் எடுக்க முடியும். ஆனால், இப்போது ஒரு முறைக்கு ரூ.4000 வீதம் மாதத்திற்கு ரூ.32,000 மட்டுமே எடுக்க முடியும். சில வங்கிகளின் தானியங்கி நடுவங்கள் இரு மாதங்களாக செயல்படாததால் பிற வங்கிகளின் தானியங்கி நடுவங்களில் 3 முறைகளில் ரூ12,000 மட்டுமே கட்டணமின்றி எடுக்க முடியும். அதற்கு மேல் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் ரூ.20 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியின் உச்சவரம்புப்படி தானியங்கி நடுவங்களில் அனுமதிக்கப்பட்ட முறைகளில் எடுக்கப்படும் பணம் போதுமானதாக இருக்காது. இதற்குக் காரணம் ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள் தானே தவிர, வாடிக்கையாளர்களின் தவறு அல்ல. அத்தகைய சூழலில் ரிசர்வ் வங்கியின் தவறுக்காக வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது எந்த வகை நியாயம்? என்பது தெரியவில்லை. இதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தான் பொறுப்பேற்க வேண்டும்; பற்று அட்டைகளின் கூடுதல் பயன்பாட்டுக்கான கட்டணத்தை இரத்து செய்ய வேண்டும்.

மற்றொருபுறம் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். இதை சாத்தியமாக்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் இல்லை என்பது ஒருபுறமிருக்க, அப்படியே இருந்தாலும் அதற்கு மாறுவதற்கு வலிமையான காரணங்கள் தேவை. பணப் பரிமாற்றத்தை விட பணமில்லா பரிமாற்றம் இலாபமானது என மக்கள் நினைத்தால் அதற்கு மாறுவார்கள். எனவே, இருக்கும் கட்டமைப்பு வசதிக்கு ஏற்ப பணமில்லா பரிமாற்றம் நடக்க வசதியாக வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்படும் பணத்திற்கு 1% முதல் 2% வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தால், அது பலரையும் பணமில்லா பரிவர்த்தனைக்கு அழைத்து வரும். ஆனால், அத்தகைய சலுகைகள் அறிவிக்கப்படவில்லை.

மத்திய அரசு சில சலுகைகள் அறிவித்தாலும் அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. உதாரணமாக எரிவாயு உருளைகளுக்கான பணத்தை ஆன் & லைனில் செலுத்தினால் ரூ.5 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த தொகையை ஆன் & லைனில் செலுத்த ரூ.8 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆடு விற்றதில் கிடைத்த லாபம் மாடு விற்றதில் போன கதையாக, ஆன்லைனில் செலுத்தியதற்காக கிடைத்த ரூ.5 லாபத்தை விட ரூ.3 அதிகமாக ஆன்&லைன் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், இத்திட்டத்தில் யார் சேருவார்கள்? கடவுச்சீட்டுக்கு ரூ.1000 செலுத்த கட்டணமாக 16 ரூபாயும், ரூ.10000 மின்கட்டணம் செலுத்துவதற்கு ரூ.200ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு பற்று அட்டை மூலம் செலுத்தும் பணத்திற்கு ஒரு விழுக்காடு வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தை சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் தான் செலுத்த வேண்டும். ஆனால், இப்போது அந்தக் கட்டணத்தை வாடிக்கையாளரே செலுத்த வேண்டும் என்று வணிக நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகின்றன. பணமில்லா பரிவர்த்தனை செய்வதில் இவ்வளவு பாதிப்புகள் இருக்கும் போது, அவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு மின்னணு பரிமாற்றத்திற்கு மாற எவரும் விரும்ப மாட்டார்கள். எனவே, பரிமாற்றக் கட்டணங்களை ரத்து செய்து, ஊக்கப்பரிசுகளை வழங்குவதன் மூலம் தான் மின்னணு பரிமாற்றத்தை அதிகரிக்க முடியும் என்பதால், அதற்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...